Archives

“சேஷனைத் தேடி…”

ஒம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே

 

தேடுவோம் சேஷனைதேடுவோம் சேஷனைதேடுவோம்….சேஷனை……

பாடுவோம் அவர் புகழ். தேடுவோம் சேஷனை

பாடுவோம் அவர் புகழ்….(தேடுவோம்) …..

காலை வளர் கதிரோனே,…..

காலை வளர் கதிரோனே,குளிர், மாலை வளர் மதியோனே

விண்ணுலாவும் மீன்களே,….வீசும் தென்றல் காற்றே,..

சேஷனைக் கண்டீரோ ,எங்கள் சேஷனைக் கண்டீரோ !   (இல்லை)

கூடவேஎங்கள் துணை….. வாராயோ ..(தேடுவோம் )..

அண்ணாமலை ஊரினிலே, ….

அண்ணாமலை ஊரினிலே, அண்ணாமலை கோவிலிலே,

தேடுவோம் …  சேஷனை ….தேடுவோம்

அவல், பொறி, சுவைப்போனே,…

அவல், பொறி, சுவைப்போனே,…பக்தர் தவம் காத்தவனே

எங்கள்சேஷனைக் கண்டாயோ ? (இல்லை )

கூடவேஎங்கள் துணை….வாராயோ…(தேடுவோம்)

அருணகிரி அன்பனே….

அருணகிரி அன்பனே, செந்தமிழ் வேந்தனே,, கம்பத்து உதித்தோனே……

எங்கள்சேஷனைக் கண்டாயோ ?…….(இல்லை )

சேஷனைக் காணாமல், பக்தர் கூட்டம் தவிக்குதையா

கொஞ்சம்…..,மயில் விட்டுப் பார் அய்யா ! ….(wait 2 secs)

கொஞ்சம்…….சேவல் விடுத்து பார் அய்யா !…(wait 2 secs)

கொஞ்சம்…….உன் வேல் அனுப்பித்தேடெய் யா !…(wait 2 secs)

எங்கள் சேஷனைக் கண்டாயோ?…….(இல்லை )

கூடவேஎங்கள் துணை …..வாராயோ ? …(தேடுவோம்)

பெரியகோவில் பெரியோனே……

பெரியகோவில் பெரியோனே, அண்ணாமலை வாசனே ,அண்ணாமலை சித்தனே

மூவருக்கும்மூத்தோனே ….

சற்று……கண் திறந்து பாராயோ……..

எங்கள், குறை..ஒன்று கேளாயோ ..

எங்கள், சேஷனைத் தாராயோநீ

சேஷனாய் வாராயோ……..(silence)

கண்டுகொண்டோம் சேஷனை

கண்டுகொண்டோம்….

ஒம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே

- ஶ்ரீ. சுந்தரராஜன் சுப்பிரமணியன், புது டெல்லி

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் நாமாவளி

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே

நினைவிலும் சேஷாத்ரி, கனவிலும் சேஷாத்ரி

அண்ணாமலை ஆண்டவனே, நீ வருவாய் சேஷாத்ரி

அண்ணாமலை தெய்வமே, அண்ணலே என் சேஷாத்ரி

அன்புடன் அணைத்திடுவாய், சிவனே என் சேஷாத்ரி …… (நினைவிலும்)

பரப்ரம்மாய் எங்கும் பரவி நிற்கும் சேஷாத்ரி

எங்கள் பாவத்தை களைந்திடுவாய், என் சிவனே சேஷாத்ரி

திருப்புகழ் நாதனின் திருமகனே சேஷாத்ரி

உன் திருவடியை நாடி வந்தோம், என் துரையே சேஷாத்ரி….(நினைவிலும்)

அண்ணாமலை தீபமே, என் சிவனே சேஷாத்ரி

நான், ஏழை என்று அறியாயோ!   எடுத்தணைப்பாய்  சேஷாத்ரி

கிரிவலப்பாதையில் கடுகி வந்தோம் சேஷாத்ரி

கல்லும் முள்ளும், குத்துதையா,………..எங்கள் வினை என்னும்

கல்லும் முள்ளும், குத்துதையா, கைகொடுப்பாய் சேஷாத்ரி (நினைவிலும்)

மூடன் என் குணம் அறிந்து, குறை தீர்ப்பாய் சேஷாத்ரி

என், சிறுமை கண்டு இரங்காயோ, சிவனே என் சேஷாத்ரி

பெரிய கோவில் தனில் வாழும், பெரியவனே சேஷாத்ரி

எங்கள் ஊழ்வினையை உடன் எரித்து காத்தருள்வாய் சேஷாத்ரி ..(நினைவிலும்)

தாய் தந்தையும் நீ அல்லவோ, தாரகனே சேஷாத்ரி

தடுமாறித் தவிகின்றோம், துணைவருவாய் சேஷாத்ரி

ராஜலிங்க சுவாமியின் ராஜாவே சேஷாத்ரி

வழிதேடி அலைகின்றோம், வந்திடுவாய் சேஷாத்ரி ..(நினைவிலும்)

தினம் சொல்லும் திருமந்திரம், உன் திருவடிக்கே சேஷாத்ரி

உன், திருவடியை காணவேண்டும், இக்கணமே சேஷாத்ரி ..

==============tempo changes============

இக்கணமே சேஷாத்ரி ..- வரவேண்டும் சேஷாத்ரி

காத்திருப்பேன் சேஷாத்ரி - காணவேண்டும் சேஷாத்ரி

சத்குருவே சேஷாத்ரி - திருவடிக்கே சேஷாத்ரி

திருவடிக்கே சேஷாத்ரி -சத்குருவே சேஷாத்ரி

என் அம்மையே சேஷாத்ரி - என் அப்பனே சேஷாத்ரி

செஞ்சுடரே சேஷாத்ரி - என் சிவனே சேஷாத்ரி

பெரியோனே சேஷாத்ரி - என் குருவே சேஷாத்ரி

நினைவிலும் சேஷாத்ரி, கனவிலும் சேஷாத்ரி

அண்ணாமலை ஆண்டவனே, நீ வருவாய் சேஷாத்ரி

 

பக்தரும் ஸ்ரீ சேஷனும்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 1 (26th. March, 2010)

பொன்னம்பலத்தில் உதித்த சிவ சேஷா!
கிங்கிணி அணிந்த
உன் அழகிய செவ்வடிகளுக்கு
முல்லை மலரால் ஆராதனை செய்ய
அருள்வாய்
அழகிய சிவ சேஷா!
என் சிதம்பர நாதா!
என் இதயத் தாமரையில்,
உன் பாதம் பதிந்து
நடராஜனாய்,
என்றும் என் உள்ளத்தில்
ஆனந்த நடனம் ஆடுவாய், ஸ்ரீ சேஷா!
சிவ சேஷா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 2 (28th. March, 2010)

சேஷா! சந்திரசேகரா!
சந்திர பிம்பங்களான உன் அனுக்கிரஹம்,
என் மனதைக் குளிரச் செய்கிறதே!
மழைப் போல் உன் அனுக்கிரஹம்
என் இதயத்திற்கு பசுமை அளிக்கிறதே!
பூர்ணச்சந்திரனே! சேஷப்பிரம்மனே!
உன் மென்மையான பார்வையினால்
சாந்தம் தானே! சந்தோஷம் தானே!
சேஷா! சந்திரசேகரா!
என் இதயம் உன் கோவில்….
உன் பொற்பாதம் என் கோவில்!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 3 (28th. March, 2010)

சேஷ ப்ரபோ!
உன் நறுமணத்தை
வரமாக அளித்தாயே! என் சேஷா!
மல்லிகையாய் காட்சி அளித்த
மல்லிகார்ஜுனா ஸ்ரீசேஷா!
முல்லையாய் தரிசனம் தந்த
முல்லைவன நாதா! ஸ்ரீ சேஷா!
சேஷா! சிவ சேஷா!
உம்மையே எனக்கு வரமாக அளித்த
சேஷ பெருமானே!
உன் செந்தாமரை பாதங்களை
என்றும் நாடுகிறேன் ஸ்வாமி!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 4 (2nd. April, 2010)

உள்ளத்தை தொட்டுருக்கும்
சூரியனே, ஸ்ரீ சேஷனே !
தங்க மயமான  பரஞ்ஜோதியே !
பொன்னார் மேனியனே!
வைரமாய்  ஜொலிப்பது உன் முகம் தானே,
நம் ஜெகத்தை  பிரகாசிக்க செய்யும்
தேஜோமயமான சிவசேஷனே!
ஸ்ரீ அருணாசலேஷ்வரனே!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 5 (5th. April, 2010)
தாயும் தந்தையுமாய்
இரவும் பகலும்,
என்னை ரக்ஷித்து வருகிற தாயுமானவா! ஸ்ரீ சேஷா!
என் இதயத்தை நிறைத்துவிட்டாயே,
உன் அன்பினால், அம்மையப்பா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 5 (5th. April, 2010)

உன் பிரசாதம் (கிரிவலம் சென்றபோது )

பெற்று மகிழ்ந்தேன் சேஷா!
அன்பு பொழிந்து,
நீ அளித்த சர்க்கரைப் பொங்கலே,
எனக்கு மஹா பிரசாதம்!

வெல்லத்தின் இனிமையும்,
பச்சை கர்பூரத்தின் மணமும்,
அதில் கண்டேன்,என் சேஷா!
பசி தீர்ந்தேன், என் சேஷா!

நீயே, என் பசி தீர்க்கும்
அன்னபூர்ணேஷ்வரி!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 6 (5th. April, 2010)

கடுமை வெய்யிலில்
மதுர ரசம் கொண்ட பன்னீரை,
தீர்த்தமாக அனுகிரஹித்த,
சேஷ குரு நாதனின்
கருணையை நினைந்து
ஆனந்தம் கொண்டேனே!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 7(11th. April, 2010)

பாண்டுரங்கனைப்போல்
காத்துக்கொண்டிருக்கும்,
என் சேஷநாதா!
உன் சரணாகதியே, எனக்கு துணை..
என்னை பிரியாமல் இருக்கும், ப்ராண நாதா!

வேறு  எவரிடம் செல்லவேன்டும்?
நீ தானே என் ஆபத்பாந்தவா, ஸ்ரீ சேஷா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 8(14th. April, 2010)

குழந்தையின் அன்பே உனது,
என உணர்த்திய பால சேஷா!
பாசமுடன் உன் பிஞ்சு பாதங்களை
பூவினால் அலங்கரித்து மகிழ்வேன், சேஷா!
என்றும் ஸேவிப்பேன்,
என் பால் போன்ற மனம் கொண்ட சேஷனை,
குழந்தை வேலனை!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 9(14th. April, 2010)

குழந்தை மனதிற்கு
ஞானம் தரும், கல்வி தரும்,
தெய்வமே, என் சேஷ பாலகுருநாதன்!

தனிமையிலே வாழ்ந்த என் குழந்தையை
கூட்டியழைத்து, பேசிவிளையாடும்,
பாலகுமாரா! சேஷா!
உனை கண்டு சிரித்துமகிழும்
என் பாலனின், தோழன் நீ தானே,
என் ஸ்கந்த சேஷா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 10(15th. April, 2010)

உன் அன்பினால், என் இல்லத்தை,
திருக்கோவிலாக மாற்றினாயே,
சிவ சேஷா!
உன் அபிஷேக ஜலத்தை,
வரப்பிரசாதமாக, பொழிந்து
புண்ணிய தீர்தத்தால்,
மனம் மகிழவைத்தாயே,
என் உன்னதமான சிவ சேஷா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 11(15th. April, 2010)

நமஸ்கரிக்கின்றேன் ஸ்வாமி சேஷா!
உன் பொற்பாதங்கள் பட்டு
சோணாசலாவான,
இந்த பொன்னான மண்ணை….

நமஸ்கரிக்கின்றேன் ஸ்வாமி சேஷா!
பொன்னான நேரத்தில்,

மெய் மறக்கச் செய்யும்
உன் திவ்ய தரிசனத்திற்காக…..

நமஸ்கரிக்கின்றேன் ஸ்வாமி சேஷா!
பேரானந்தம் அளித்து,
அனுகிரஹிக்கும்,
உன் நறுமணத்திற்காக…..

நமஸ்கரிக்கின்றேன் ஸ்வாமி சேஷா!
என் குலதெய்வமாய்,
ஸ்ரீ வைதீச்வரனாய், வந்து,
என்னை குணப்படுத்தியதற்காக….

நமஸ்கரிக்கின்றேன் ஸ்வாமி சேஷா!
எவரிடமும் காணமுடியாத,
மதி மயக்கச் செய்யும்
உன் பேரன்பிற்காக….

நமஸ்கரிக்கின்றேன் ஸ்வாமி சேஷா!
என் பாமர வாழ்க்கையில்
பரம குருவாய் வந்தருளியதற்காக

நமஸ்கரிக்கின்றேன் ஸ்வாமி சேஷா!
உன் பக்தனாய் ,
என்னை ஏற்றுக்கொண்டதற்காக….

- வைஷ்ணவி, பெங்களூரு

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 12(15th. April, 2010)

(மதிப்புக்குரிய குருவிடம்
அடைக்கலம் அடைந்தோம்
அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே  உலகு)

நானிலத்தில் பல பிறவி  எடுத்து
திண்டாடி திண்டாடி
இப்பிறவியில் உம்மைக்கண்டோம் !
குருவின் ஸ்பரிசம் எம்மை அணைக்கவே !
மகான் சேஷனை யாம் அறிந்தோம் !
பரவசம் அடைந்தோம் !

எமது வாழ்வினை உய்ய வைத்தீர் !
சத்குரு ராஜலிங்கம் சுவாமிகளுக்கு
எமது மனமார்ந்த நன்றி !
தாய் தந்தையும், எமது அசானுமாகி
எமக்கு  சீரான வாழ்வு தந்து
நற்கதி அருளிய ஈசனே ! சேஷனே! சத்குருவே !

எவ்வாறு யாம் இவ்வாழ்வினில்
கைம்மாறு செய்வோம், எங்கள் குரு நாதா !

காலையும் நீயே மாலையும் நீயே !
அணுவும் நீயே அசைவும் நீயே !
உயிரும் நீயே உயிரோட்டமும் நீயே !
உணவும் நீயே ! உள்ளதெல்லாம் நீயே !
நண்பனில்  நீயே ! பகைவனில் நீயே !
ஆசையும் நீயே ! அன்பும் நீயே !

எங்கும் நீர் இருக்க வேறிடம் எது எமக்கு !
விருப்பும் வெறுப்பும் இல்லாத
இணை இல்லா கதி நீயே !
அனைவரை அணைக்கும் அடைக்கலம் நீயே !
பாவங்கள் எல்லாம் பொசுக்கிடும் உறைவிடம் நீயே !

குரு நாமமின்றி எம் நாவினில்
வேறு சொல் ஏதும் வாராதே !
உறங்கும் வேளயிலும் , விழிக்கும் வேளையிலும் ,
எம் நினைவினில் நீர் என்றென்றும்  அருள் புரிய
தாழ்மையுடன் வேண்டுகிறோம்

எமது ஈசனே! சேஷனே !

(பெரு மதிப்புக்குரிய குருவின்
பாதரவிந்ததில் சமர்பிக்கும்
என்றென்றும் சேஷ சேவையில்
பேரானந்தத்துடன்  எழுதும்

- ராஜகோபால்  மஹாதேவன்)

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 13(15th. April, 2010)

மொட்டுக்கள் மலர்வதுபோல்
மலர்ந்த அன்பு,
உன் பொற்பாதங்களிலே….
என் சேஷனே!

பூங்காவனமாகிய உன் அன்பு ,
என் மனதில்,
நிலைத்திருக்க  வேண்டுமே, …
மலர் மனம் கொண்ட,
என் சேஷ பெருமானே!


பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 14(15th. April, 2010)

ஸ்ரீ ரங்க நாதா! ஸ்ரீ சேஷா!
கோதையின்
அழகிய மாலை சூடிய
சுந்தர வதனா! ஸ்ரீ சேஷா!

பேரன்பு நிறைந்த
உன மாலையில்  ஒரு பூவாய்,
நான் இருக்க வேண்டுகிறேன்,
ஸ்ரீ சேஷா!

வைரமாய்,
தங்கமாய்,

நின்றருளும்
ஸ்ரீ சேஷா!
வெங்கடேசா!

உன் பாத சேவையில்,
நான் என்றும் நிலைக்கவேண்டும்,
கருணாசாகரா! ஸ்ரீ சேஷா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 15(2nd. June, 2010)

சங்கரனாய் உன்னை காணும் நேரம்,
நமச் சிவாயமே மெய்பொருளாக தோன்றியது.
நாராயணனாய் உன்னை காணும் நேரம்,
பாகவதமே பரம்பொருளாக தோன்றியது.

எம்பெருமான் சேஷனை,
எவ்வாறு சேவிப்பது,
என்றெண்ணும் நேரம்,
துளசியும், ருத்ராக்ஷமும் இணைத்தளித்து,
சங்கரனும், நாராயணும், உன் ரூபமே
எனறு உணர்த்தினாயே சேஷ நாதா!

உன்னை நான் எவ்வாறு சேவிப்பேன், சேஷ நாதா?
சேஷ ரூபமே, சங்கரநாராயணனின் ரூபம்,
சங்கரநாராயணனின் ரூபமே, பரப்பிரம்ம ரூபம்
என்று இம்மனதிற்கு
நீ தானே கல்வியளிக்க வேண்டும்
என் குருநாதா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 16(2nd. June, 2010)

“பக்தனின் தவிப்பு”"

கலங்கிய மனசு இது (பக்தன்), என் சேஷா
மாயை வசம் இது போனது, என்  சேஷா

கதை எல்லாம் கட்டியது இது, என் சேஷா
நான் ரொம்ப கலங்கி  ஆடி போனேன்,என் சேஷா
நிற்காமல் நான் தவித்தேன், என் சேஷா
உன் சொல்லே உறு துணை ஆச்சு, என் சேஷா
தினமும் உன் நாமம் சொல்கிறேன், என் சேஷா
பாவி மனசு படுத்துதே, என் சேஷா
கருமம் என்னை விடவில்லை, என் சேஷா

நீ ஓடி வாராய் உடனே என் கர்ம வினை தீர,

என் சேஷா
கர்ம வினை தீர, நீ எனக்கு அளித்த சேஷ மந்திரம்
மாயையை ஒட்டிவிடும் என உணர்ந்தேன்,

என் சேஷா
என் மனம் உன்னிடம் வருவதை காட்டிலும்
நீ என் மனதில் புகுந்து விடு, என் சேஷா
சேஷ மந்திரம் மட்டும் ஜெபிக்கிறேன்,

என் சேஷா
நீ என் மனதில் எப்போதும் குடியிருப்பாய்,
என் சேஷா
என் மனம் என்னும் இல்லத்தில் உன் நாமம்எப்போதும், என் சேஷா
உன் நாமமே என் மனதில் ஒலிக்க வேண்டும் எப்போதும், என் சேஷா
செய்த பிழை எல்லாம் மன்னித்து விடு, என் சேஷா
ஏன்? நானும் உன் குழந்தை அல்லவா, என் சேஷா

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே“, என் சேஷா
உன் மா மந்திரம் ஜெபிக்கும் என்னை

யமன் நெருங்க மாட்டான், என் சேஷா
நீ கூற்றுவனுக்கு கொற்றவன், என் சேஷா

நீயே அவதார சிவ சேஷன், என் சேஷா
நீ சிவ சேஷனாக இருப்பதால் தானே இன்றும்,

அற்புதங்கள் நடத்துகிறாய், என் சேஷா
நீயே பிரபஞ்ச நாயகன்” , என் சேஷா
நீயே அண்ணாமலைஆவாய் , என் சேஷா
நீயே தில்லையில்உறையும் நடராஜனும்ஆவாய், என் சேஷா

நீயே வைதீஸ்வரனும்ஆவாய், என் சேஷா
நீயே வேலவனும்ஆவாய், என் சேஷா !

சிற்றம்பலம்


- (
ஆக்கியோர்: நியூ டெல்லி சுந்தர ராஜன் &குருஜி
)

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 17(2nd. June, 2010)

அமைதி அளிக்கும்
உன் சாந்தஸ்வரூபம்
கண்டேன் சேஷ நாதா!
தண்ணீர் குளத்திலே….

தெளிவான தண்ணீர்,
உன் மனம் போலவே, சேஷா!

இன்பம் அளிக்கும்
உன்  சுந்தரரூபம்
கண்டேன் சேஷ நாதா!
பசும் சோலையிலே….

மதுரசம் நிறைந்த
அழகிய பூக்கள்,
உன் உள்ளம் போலவே, சேஷா!

இயற்கையாய் அவதரித்த,
பேரன்பு நிறைந்த,
என் சேஷ பெருமானைக் கண்டேனே!

வேலவனின் அழகு கொண்ட
கோபாலனின் அன்பு கொண்ட,
தேவாதிதேவனாம்,
என் சேஷ நாதனைக் கண்டேன்!

அளவு கடந்த அன்பை,
மனதில் பதிய வைத்து;
ஏழேழு பிறவிக்கும்
என் துணையாய்,
என் சேஷ பெருமானைக் கண்டேன்!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 18 (13th. July, 2010)

என் உள்ளம் வாழ செய்யும் சேஷ நாதா!
நான்மனம் கலங்கிய போது
கண்கலங்கினாயே பங்கஜ லோசனா!

சோகத்திலும், சோதனையிலும்,
மாணிக்கமான உன் கண்கள் மட்டுமே,
பரவசம் அடையச் செய்யும் என்னை,
சேஷ நாதா!

வெள்ளம் போல் ஓடுகிற
உன் கருணை மழையில்
அழிந்துபோனது என் கவலை,
காருண்யசாகரா!

சேமித்து வைக்க முடியவில்லையே
உன் பேரன்பை, சேஷ நாதா!
என் சிறிய நெஞ்சத்திலே!”

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 19(13th. July, 2010)

இனிய காலை வேளையில்,
குயில்களின் குதூகலத்தை
மனதில் கொண்டு,
விளக்கேற்றி,
சேவிப்பொம்
எங்கள் அன்பு சேஷமன்னாரை

மணமும் அழகும் நிறைந்த பூக்களால்,
சிவசேஷ பெருமானின்
பொற்பாதங்களை அலங்கரித்து
சேவிப்பொம்
எங்கள் அன்பு சேஷமன்னாரை

அருள்வாயே, சிவசேஷா!
பொன் சிரிப்பணிந்த
உம் தேஜோமயமான கருணை முகம்,
எங்கள் நிர்மால்ய தரிசனமாக!

எங்கள் த்ங்கக் கை சேஷ மன்னாரை
சேவிக்கும் நேரமே,
எங்கள் சூர்யோதயம்

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 20(30th. January, 2011)

உன் சரணாரவிந்தத்தைக் கணடதுமே
என் முகம் மலர்ந்திடுமே,

என் உயிர் சேஷ நாதா!

உன் நாம சங்கீர்த்தனம் கேட்டதுமே
என் மனம் மலர்ந்திடுமே,

என் இன்ப சேஷ நாதா!

அன்பும் அழகும் நிறைந்த
உன் நயனங்களைக் கண்டதுமே
என் உள்ளம் மலர்ந்திடுமே,

என் அன்பு சேஷ நாதா!

உன் கருணை முகம் நினைத்ததுமே
என் இதயம் மலர்ந்திடுமே,

என் உயிர் சேஷ நாதா!

பக்தரும் ஸ்ரீ சேஷனும் - 21 (4th. September, 2011)

மரகத பாலா! சிவ சிவ சேஷா!
ஜய ஜய சேஷா! சுந்தரேஷா!

மரகத பாலா!
நீ எனை அருள்வாய்!
மரகத மீனாக்‌ஷி சுந்தரேஷா!

அங்கையர் கண்ணியின்
அழகிய மணவாளா!
உன் மீது காதல் கொண்டு
என்னேரமும் மநமுருகி
பல்லாண்டு பாடிடவே!
நீ எனை அருள்வாய்!

ஜய ஜய சேஷா!
சிவ சிவ சேஷா!
என் உயிர்க்கினிய
சுந்தரேஷா!

மரகத பாலா!
நீ எனை அருள்வாய்!
மரகத மீனாக்‌ஷி சுந்தரேஷா!